

'ஐ' படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க உரிமைகள் விற்பனை முடிவுற்றது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை ஆஸ்கர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு(Patch Work) நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு 'ஐ' வெளியாகும் என்று பலர் கூறி வந்தாலும், படத்தின் வியாபாரத்தினைத் தொடங்காமல் இருந்தார்கள். தற்போது இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமைகளை பெரும் விலைக்கு விற்றிருக்கிறார்கள்.
இது குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, "'ஐ' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை, சுஷ்மா சினி ஆர்ட்ஸ் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. தெலுங்கு உரிமையை பிரசாத் மற்றும் ஆர்.பி.செளத்ரி நிறுவனம் இணைந்து வாங்கி இருக்கிறார்கள்.
டி.வி உரிமை ஜெயா டி.வியிடம் இருக்கிறது. படத்தின் மற்ற மொழி டப்பிங் பணிகள் திங்கட்கிழமை முடிவடையும். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு என்பது சின்ன சின்ன PATCH WORK பணிகள் தான். எந்தவிதத்திலும் படத்தின் வெளியீட்டை அது தாமதப்படுத்தாது. திங்கட்கிழமைக்குப் (22.09.2014) பிறகு தீபாவளி வெளியீட்டிற்கான திரையரங்க ஒப்பந்தப் பணிகள் துவங்கப்படும்" என்று கூறினார்.
தற்போது விஷால் நடிக்கும் 'பூஜை' மற்றும் 'ஐ' ஆகியவை தீபாவளி வெளியீட்டிற்கு உறுதியாகி இருக்கின்றன