Last Updated : 14 Jan, 2019 07:48 PM

 

Published : 14 Jan 2019 07:48 PM
Last Updated : 14 Jan 2019 07:48 PM

‘அமைதிப்படை’க்கு 25 வயசு

ஒருவர், இன்னொருவரை ஏமாற்றிவிட்டால், ‘என்ன காதுல பூ சுத்துறியா?’ என்று கேட்ட காலம் உண்டு. பிறகு சினிமா ஊடுருவி இரண்டறக் கலந்ததற்குப் பிறகு, ‘சரியான ரீல் பார்ட்டிப்பா அவன்’ என்றார்கள். சினிமாவின் நுட்பங்களை ஓரளவுக்கு அனுமானிக்கத் தெரிந்த பிறகு, ‘செம டூப் பார்ட்டிடா’ என்று கிண்டல் செய்தார்கள். இதையடுத்து அடுத்தடுத்த காலகட்டங்களில், தமிழ் கூறும் நல்லுலகில் சினிமா பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. அப்போது ஏமாற்றுபவர்களை, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சொன்ன வார்த்தை, ‘என்ன அல்வா கொடுக்கறியா?’ என்பதுதான்!

அல்வா கொடுத்துட்டான்யா என்று அல்வாவை, ஏமாற்றுவதற்கான குறியீடாகக் காட்டிய படத்தை, அல்வாவைத் தொடாத ஷுகர் கொண்டவர்கள் கூட, ஷூகுராகச் சொல்லுவார்கள். அந்தப் படம் அமைதிப்படை. சத்யராஜின் அமைதிப்படை. இயக்குநர் மணிவண்ணனின் அமைதிப்படை. மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் உருவான அமைதிப்படை.

போலீசில் பணிபுரியும் தங்கவேலு (சத்யராஜ்), சொந்த கிராமத்துக்கு வருகிறார். அவருக்கு பெண் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் பெண் பார்க்கப் போகிறார்கள். ரஞ்சிதாவைத்தான் பெண் பார்க்க வந்திருக்கிறார் சத்யராஜ். ஆனால் எல்லோரும் பெண்ணைப் பார்த்திருக்க, சத்யராஜ் மட்டும் பார்க்காமல் விட்டுவிடுகிறார்.

பிறகு ரஞ்சிதாவைப் பார்க்கப் போகிறார். அடிக்கடி பார்க்கச் செல்கிறார். இதையடுத்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது எதிர்பார்ப்புகள் குறித்து பேசப்படுகிறது. ‘கட்டுன புடவையோட அனுப்பிவைங்க. அதுபோதும்’ என்கிறார் சத்யராஜ். ‘குறை இருக்குங்கறதால ஒண்ணும் வேணாங்கறீங்களா?’ என்று ஒருவர் கேட்க, ‘என்ன குறை’ என்று பேச்சு வளர, ‘மாப்ளேக்கு அப்பன் பேரு தெரியாதுல்ல’ என்று இன்னொருவர் சொல்ல, எல்லோரையும் அடித்து உதைத்து வெளுக்கிறார்.

வீட்டுக்கு வந்து, அம்மாவின் படத்தைப் போட்டு உடைக்கிறார். அப்போது தாத்தா எஸ்.எஸ்.சந்திரன் ப்ளாஷ்பேக்கைச் சொல்லத் தொடங்குகிறார்.

கஸ்தூரி. அவர் பெயர் தாயம்மா. அவர்தான் போலீஸ் சத்யராஜின் அம்மா. ‘இவ இருக்கற அழகுக்கு, அமாவாசை மாதிரி இருட்டா ஒருத்தன் வந்துடப்போறான்’ என்று தோழிகள் கிண்டல் செய்கிறார்கள்.

அடுத்து அரசியல்வாதி மணிவண்ணன். கோயிலில் சிதறுகாய் உடைக்க, அந்த சிதறுகாயை பொறுக்க எத்தனிக்கிறான் அமாவாசை. அவனை அழைத்து ‘ஏம்பா ஏழடிக்கு கையும் காலும் வைச்சிகிட்டு, நல்லாத்தானேப்பா இருக்கே’ என்று பேச்சு கொடுக்க, அமாவாசை, அமிஞ்சிக்கரை தொடங்கி அமெரிக்கா வரை பேச, ஆடித்தான் போகிறார் மணிவண்ணன். ‘நீ எங்கிட்ட வேலைக்கு வந்துரு’ என்று சேர்த்துக் கொள்கிறார்.

தாயம்மாவை சந்திக்கிறார் அமாவாசை. காதல். காதல் எனும் பேரைச் சொல்லி வளைக்கிறார். ஒருகட்டத்தில்தான் அது நிகழ்கிறது. கூட இருக்கும் அல்லக்கை வாசுவை அல்வாவில் கலக்க அபின் வாங்கி வரச் சொல்கிறார். அல்வாவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து தாயம்மாவை தாயாக்கிவிடுகிறார் அமாவாசை. உண்மையிலேயே அவளின் வாழ்வு இருளாகித்தான் போனது. கஸ்தூரியை ஏமாற்றிவிடுகிறார் சத்யராஜ்.

அதேகாலகட்டத்தில், மணிவண்ணனுக்கு தேர்தலில் சீட் தர மறுக்கப்படுகிறது. கொதித்துப் போன மணிவண்ணன் சத்யராஜை சுயேச்சையாக நிறுத்துகிறார். தேர்தல் முடிவு. கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் கூடிக்கொண்டே போகிறது. மணிவண்ணனுக்கு எதிரே சிகரெட் பிடிக்காமல் வெளியே போய் சிகரெட் பிடிக்கிறார். வாக்கு வித்தியாசம் எகிறிக்கொண்டே போக, உள்ளே சிகரெட்டுடன் வருகிறார். நாற்காலியின் ஒட்டில் உட்கார்ந்திருக்கிறார். அடுத்து இன்னும் ஓட்டு கூடுகிறது. கொஞ்சம் நாற்காலியில் நகர்ந்து உட்காருகிறார். இன்னும்… இன்னும்… என நகர்ந்து, சாய்ந்து, கால் மேல் கால் போட்டு உட்காருகிறார். ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ என்று எகத்தாளம் காட்டுகிறார். மணிவண்ணனை வெத்துப்பீஸாக்குகிறார்.

இதையடுத்து வளர்ச்சி, வளர்ச்சி. அரசியல் சூழ்ச்சி ப்ளஸ் வளர்ச்சி. காட்சிக்குக் காட்சி, வசனங்களாலும் வசன உச்சரிப்பாலும் நக்கல் நையாண்டி செய்து அரசியலை, அல்லுசில்லாக்கிக்கொண்டிருப்பார் சத்யராஜ். அன்றைய அரசியலும் இன்றைய அரசியலும் ஒண்ணுதான். அதை எந்த அளவுக்கு பகடி செய்யமுடியுமோ அந்த அளவுக்கு கொன்றெடுத்திருப்பார்கள் இருவரும்.

அரசியல் படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் இதில், இத்தனை ரகளையாகவும் கேலியாகவும் மிக மிக அப்பட்டமாக அடித்து துவைத்துக் காயப்போட்டிருப்பார் வசனகர்த்தா மணிவண்ணன். அதேசமயம், பெண் குழந்தை ஒன்றுக்கு பெயர் வைக்கும் போது, அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. வின் மனைவியான சுஜாதாவிடம் சொல்ல, சுஜாதா, அந்தக் குழந்தைக்கு தாயம்மா என்று பெயர் வைக்கிறார். அதிர்ந்து போகிறார். இப்படி நறுக்நறுக்கென காட்சிகளும் திரைக்கதையாகப் பின்னியிருப்பார் மணிவண்ணன்.

அப்பாவுக்கும் பையனுக்கும் நடக்கிற அடுத்தடுத்த மோதல்களும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசை படத்தின் காட்சிகளை தூக்கி நிறுத்தியிருக்கும். ‘ஏண்டா மணியா. இந்தக் கால அரசியலை, சோஷலிஸம், ஜனநாயகம்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடுறானுங்க. இந்த ஆளு ஜாதகத்தை வைச்சிட்டு இவ்ளோ நேரம் ஆக்குறாரே ஜோஸியரு’என்று சொல்ல, அடுத்து இனி உங்களுக்கு டைம் சரியில்ல என்று சொல்ல, அந்த ஜோஸியரைப் போட்டுத்தள்ளுகிற காட்சி மிரட்டல்.

எப்போதும் பார்க்கலாம் என்பதான படம் அமைதிப்படை. எப்போதும் மறக்கமுடியாத படங்களில் இடம்பெற்றிருக்கும் படம் அமைதிப்படை. இயக்குநர் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உண்டான பல அசத்தலான படங்களில், இந்தப் படத்துக்கும் முக்கியமானதொரு இடம் உண்டு.

எத்தனை வருடங்களானாலும் அமைதிப்படை, நமக்குள் அடிக்க ஆரம்பித்த புயல், ஓயவே ஓயாது. 94ம் வருடம் ஜனவரி மாதம் 14ம் தேதி ரிலீசானது அமைதிப்படை. மிகப்பெரிய வசூலைக் குவித்த படத்துக்கு, நூறுநாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்த படத்துக்கு இன்று 25 வயது.

ஆமாம். அமைதிப்படை ரிலீசாகி இன்றுடன் 25 வருடங்களாகிவிட்டன. இன்றுதான் 94ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசானது அமைதிப்படை.

அமைதிப்படையைத் தந்த இயக்குநர் மணிவண்ணன், இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் அமைதிப்படையும் அதன் தாக்கமும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்றுகொண்டே இருக்கும். மணிவண்ணனின் திறமை மலைக்கவைத்துக்கொண்டே இருக்கும்.

அமைதிப்படையினருக்கு பெரிய சல்யூட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x