

'பேரன்பு' படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ பதிவால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை பார்த்துவிட்டு பல இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால், ஜெயம் ரவி அண்ணன் இயக்குநர் மோகன் ராஜாவின் வீடியோ பாராட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
கொஞ்ச காலமாக சினிமாவில் உள்ள ட்ரெண்ட்டை பற்றி ஷேர் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியது. என் உதவி இயக்குநர்களிடம் எல்லாம் ஷேர் செய்து கொள்வேன். 'பேரன்பு' மாதிரி ஒரு படம் வரும்போது, இதை ஷேர் செய்து கொள்கிறேன்
சினிமா ட்ரெண்ட் எப்படியுள்ளது என்றால் த்ரில்லர் படங்கள் தான் நல்ல படம். நம்மை யோசிக்கவே விடாத படம். ஒரு நிமிடம் கூட யோசிக்கவிடாத படம் தான் நல்ல படம் என்ற ஒரு ட்ரெண்ட் உருவாகிட்டு இருக்கோ என்று தோன்றுகிறது. த்ரில்லர் படங்களும் நல்ல படங்கள் தான். அது ஒரு ஜானர் அவ்வளவே.
அதற்காக ஒரு கதையின் தன்மைக்கு, இயக்குநர் நினைப்பதற்கு, ஒரு கதையை உருவாக்குவதற்கு நேரம் தேவைப்படும். இந்தக் கட்டாயம் சில நல்ல படங்கள் வருவதையும், சில நல்ல படங்கள் ஆதரிக்கப்படுவதையும் பாதிக்கிறதோ என்ற ஒரு எண்ணம்.
'பேரன்பு' படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், அதன் SNEAK PEEK-ஐ பார்த்தேன். அதுவே போதும் இப்படத்தின் தன்மையைச் சொல்கிறது. அந்த மாதிரி படங்கள் வரும் போது, த்ரில்லர் படங்களின் எண்ணம் இப்படங்களைப் பாதிக்குமோ என்ற எண்ணம்.
கண்டிப்பாக முதல் காட்சி பார்க்கப் போவேன். கடினமான படங்களை பார்க்கவே மாட்டேன் என்று நினைப்பவர்களை, கண்டிப்பாக இதைப் பாருங்கள் என்று நிர்பந்திக்க இதைச் சொல்லவில்லை. நல்ல சினிமாவைப் பார்ப்பேன் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு என் கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோம். ஏன் அனைத்து படங்களையும் சீட்டின் நுனியில் உட்கார்ந்தே பார்க்க விரும்புகிறோம் என்று தெரியவில்லை. நன்றாக உட்கார்ந்து கலையை நல்ல ரசிப்போமே. அனைவரது திறமையையும் நல்ல உட்கார்ந்து, கவலை மறந்து ரசிப்போமே. பாஸ்ட் ஃபுட் என தொடங்கி அனைத்திலுமே பாஸ்ட்டாக இருக்கிறோம். கலையைக் கூட பாஸ்ட்டாக்க வேண்டாமே.
இவ்வாறு இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.