

சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக ஆதரவுக் கருத்து தெரிவித்த நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனை நெட்டிசன்கள் வாட்டியெடுத்ததால் மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் நேற்று (புதன்) அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இச்சம்பவம் நேற்று நெட்டிசன்களால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சபரிமலையில் பெண்கள் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டதற்குக் காரணம் அவர்கள் மலை ஏற வேண்டும், வன விலங்குகளைக் கடந்து செல்ல வேண்டும், பெண்களுக்கான போதிய வசதிகள் இல்லை என்பதே. ஆனால், அதைத் திரித்து ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்க பயன்படுத்திக் கொண்டனர். இப்போது வாழ்வியல் முறைகள் மாறிவிட்டன. இனி பெண்கள் கைகளில் முடிவை விட்டுவிடுங்கள். நெருக்கடிகளைச் சமாளித்து அங்கே செல்ல இயலுமா இயலாதா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனக் குரல்களைப் பதிவிட்டனர்.
ஆனால், சற்றும் சளைக்காத லட்சுமி, "கோயிலுக்குள் கடைபிடிக்கப்படும் பாரம்பரியம் பற்றியதே இந்தப் போராட்டங்கள். ஆனால், பாரம்பரிய பழக்கவழக்கம் என்பது தவறாக திரிக்கப்பட்டு மாதவிடாய் பெறும் பெண்கள் தூய்மையானவர்கள் அல்ல அவர்கள் ஆணுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இங்கேதான் தடையை நீக்குவது அவசியமாகிறது. இப்போதும்கூட அங்கு அனைத்து வயதுப் பெண்களும் ஆண்களைப் போல் சுலபமாக சென்றுவிட முடியாது.
என்னால் பகவத் கீதையை கண்களை மூடிக்கொண்டு பாராயணம் செய்ய முடியும். அதன் அர்த்தமும் புரியும். பைபிள், குரானும் என் வீட்டில் உள்ளன. ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது. மார்க்கம் தான், வேறு இலக்கு ஒன்றுதான். சாதியும், மனிதர்களின் நான் என்ற ஆணவமும் ஒழியட்டும்.
என்னைப் பொறுத்தவரை கடவுளுக்கு உருவம் இல்லை. கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள பிரம்மச்சாரியாகவே நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்காதீர்கள். பாலின பேதத்தை உயர்த்திப் பிடிப்பதாலேயே சபரிமலை விவகாரத்தில் இதை நான் கூறுகிறேன். அதனாலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் வரவேற்கிறேன்.
இந்துக்கள் எல்லோரையும் சமமாக நடத்தினால் மதமாற்றத்துக்கான அவசியமே இருக்காது. நான் எனது மதத்தை நேசிக்கிறேன். எனது கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க என்னால் முடிந்தவற்றை செய்கிறேன். பாரம்பரியம் என்ற பெயரில் சொல்லப்படுவதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக்கூடியவள் நானல்ல" என்றும் பதிவிட்டார்.
ஒருகட்டத்தில் ட்வீட் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிக்க இயலாத லட்சுமி, "சபரிமலை பக்தர்களுக்கு.. உங்களது உணர்வுகள் எனக்குப் புரிகிறது. சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியப் பழக்கவழக்கங்களால் நீங்கள் உணர்வுபூர்வமாக உடன்பட்டுள்ளீர்கள். எனது எதிர்ப்பு எல்லாம் கட்டுக்கதைகளுக்கும், பாலின பேதத்துக்கும் எதிரானது மட்டுமேதவிர குறிப்பிட்ட பாரம்பரியத்துக்கு எதிரானது அல்ல.
எங்கேயாவது நான் மனம் புண்படும்படி பேசியிருந்தால் சபரிமலை பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் பேதங்களுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு பாரம்பரியமும் பொதுநலம் கருதி கைவிடப்பட வேண்டும்" எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.