

சன் தொலைக்காட்சியில் ‘சூரிய வணக்கம்’, ‘திரை விமர்சனம்’, ‘வணக்கம் தமிழா’ ஆகிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருந்த டோஷிலா, இப்போது ஹலோ எஃப்.எம் ரேடியோவில் ஒலிபரப்பாகும் ’சொல்ல மறந்த கதை’ நிகழ்ச்சி ஆர்ஜேவாக பரபரப்பாகியிருக்கிறார்.
‘‘இது ஒரு சின்ன மாற்றம்தான். சீக்கிரமே மீண்டும் தொலைக்காட்சிக்குள் வரப்போறேன். டிவி சேனலுக்கு வரும் முன்பே சூரியன் எஃப்.எம்ல ஆர்ஜேவாகத்தான் கேரியர் தொடங்கினேன். அதில் இருந்து சன் தொலைக்காட்சிக்கு வந்தேன். ஹலோ எஃப்.எம்ல ’சொல்ல மறந்த கதை’ நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு வந்தப்போ, இதை மிஸ் பண்ணக் கூடாதுன்னு ஓடி வந்துட்டேன். டிவி சேனலில் ஒரு வாய்ப்பு வந்து, மிஸ் பண்ணிட்டாக்கூட திரும்பப் பிடிச்சிடலாம். ஆனா, ஆர்ஜே வாய்ப்பை மிஸ் பண்ணிட்டா, அந்த நிகழ்ச்சிக்கு வேறொருவர் செட் ஆகிடுவாங்க. அப்புறம், அந்த இடத்தை மீண்டும் பிடிக்க சில வருஷங்கள் ஆகும்’’ என்றவர், ‘சொல்ல மறந்த கதை’ நிகழ்ச்சி பற்றியும் விளக்கினார்.
‘‘சமீபத்தில் வெளியான ‘காற்றின் மொழி’ படம் பார்த்திருப்பீங்க. அந்தச் சாயலில் ஒரு நிகழ்ச்சிதான் இது. இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் ‘துமாரி சுலு’ படம் வந்தப்பவே இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நானும் தொடணும்னு இருந்தேன். இப்போது அது அமைந்திருப்பது சந்தோஷம். நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒலிபரப்பாகும். ஒவ்வொருவரும் தங்களது வலிகளை ஷேர் பண்றப்போ சில நாட்கள் தூக்கமே வராது. அதுவும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகள், சாதனை புரிந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எல்லாம் காதுக்கு வரும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். சிலர் அதை ஷேர் பண்றதே வலி குறைஞ்ச மாதிரி இருக்குன்னு சொல்வாங்க.
ஜோதிகா போலவே, நானும் ஹலோ எஃப்எம் ஆர்ஜேவா வர்றேன். அந்தப் படத்துல கூப்பிடுவதுபோல ‘றெக்கை முளைத்த பச்சைக்கிளி. இனிமே நீதான் காற்றின் மொழி’ன்னு பலரும் பாராட்டுறாங்க. வேறு என்ன வேண்டும்’’ என்கிறார் டோஷிலா.