

'பேட்ட' படக்குழுவினரின் விளம்பரத்துக்கு, விஸ்வாசம்’ படக்குழுவினரின் பதிலடியால் ட்விட்டர் தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஜனவரி 10-ம் தேதி முதல் முறையாக ரஜினி, அஜித் படங்கள் ஒரே தேதியில் வெளியாகியுள்ளன. இரண்டில் எது வெற்றி, எந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய 2 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல திரையரங்குகளில் தற்போது வரை தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.இந்நிலையில், முதன் முறையாக இரண்டு படக்குழுவினருக்குமே நேரடி வார்த்தைப் போர் சமூகவலைத்தளத்தில் நடைபெற்றுள்ளது.
க்யூப் நிறுவனத்திலிருந்து எந்த படத்துக்கு எவ்வளவு பாஸ்வோர்ட்கள் கொடுக்கப்பட்டது என்பதை அறிவித்தார்கள்.இதை வைத்து 'பேட்ட' படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார்கள். அதில் 3 மொழிகள், 1063 திரையரங்குகள், 34 நாடுகள் என இடம்பெற்றிருந்தன. 'விஸ்வாசம்' படமும் 541 திரையரங்குகள், 31 நாடுகள் என க்யூப் நிறுவனத்தின் தகவலை வைத்து போஸ்டர் வெளியிட்டார்கள்.இதை 'பேட்ட்' படக்குழுவினர் அனைவருமே பகிர்ந்தனர்.
"தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு அதிகமாக வெளியானது. 2-வது நாள் முதலே திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக 'விஸ்வாசம்' படத்தை தமிழக முழுக்க விநியோகம் செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் மக்களுக்கும், திரையரங்க அதிபர்களுக்கும் உண்மை என்னவென்பது தெரியும். ஏன் அனாவசியமாக போட்டியையும் மோதலையும் உருவாக்க முயல்கிறீர்கள்?
தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பார்த்தால் தெளிவடையலாம். நம் இருவரது படங்களும் எப்படி வசூலித்துள்ளன என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தனர்.இந்த பதில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பல ரஜினி ரசிகர்கள், தற்போது திரையரங்குகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படக்குழுவினருமே முதன் முறையாக வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், ட்விட்டர் பக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.