சிரிக்கும் காட்சிகளில் நடிப்பது சிரமமாக இருந்தது: துருவ் விக்ரம்

சிரிக்கும் காட்சிகளில் நடிப்பது சிரமமாக இருந்தது: துருவ் விக்ரம்
Updated on
1 min read

பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் இது. அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், படம் குறித்து துருவ் விக்ரம் பேசியதாவது:

சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மட்டும்தான் இருந்தது. அப்பாவுக்கும் அதுபற்றித் தெரியும். ஆனால், அவர் என்னிடம் அதைப்பற்றிப் பேசியதில்லை. நியூயார்க்கில் நடிப்புப் பயிற்சியில் சேர்ந்தேன். அதன்பிறகு தான் நானும் அப்பாவும் சினிமாவில் நடிப்பது குறித்துப் பேசினோம். நான் சினிமாவுக்குள் நுழைந்தது சீக்கிரமே நடந்துவிட்டது. என் படம் எப்படி இருக்கும், பாடல்கள் எப்படி இருக்கும் என எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பேன்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கில் தான் முதன்முதலாக நடிக்கப் போகிறேன் என்றதுமே பயமாக இருந்தது. காரணம், அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.  ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதும் அந்தப் பயம் மறைந்துவிட்டது. அதற்குக் காரணம், இயக்குநர் பாலா. அவர் இல்லையென்றால் ‘வர்மா’ படத்தில் நடிப்பது எனக்குக் கடினமாக இருந்திருக்கும். நான் சிறுவயது முதலே அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதால், எனக்கு செட்டில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. எப்போதும் போல்தான் இருக்கிறார். சில நேரங்களில் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். மற்றவர்கள் சொல்வது போல அவர் பயங்கரமான ஆளெல்லாம் இல்லை.

‘அர்ஜுன் ரெட்டி’யில் இருந்தது போல தாடி, மீசை, தலைமுடி வளர்க்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தளவுக்கு இருக்காது. எனவே, எனக்கு எப்படி செட் ஆகுமோ, அதற்குத் தகுந்ததுபோல் பாலா மாற்றியிருக்கிறார். ‘வர்மா’ படத்தின் இசை பற்றிச் சொல்ல வேண்டும். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதனையே ‘வர்மா’வுக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார் பாலா. ஆனாலும், இந்தப் படத்துக்கு முற்றிலும் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார். மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் கதை உங்கள் அனைவருக்கும் தெரியும். ‘வர்மா’ படத்தில் நடிப்பதற்காக நான் மருத்துவத்துறை பற்றித் தெரிந்து கொண்டேன். மருத்துவர்களாக இருக்கும் நண்பர்களிடம் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். என்னைப் பொறுத்தவரை ‘வர்மா’ படத்தில் அழும் காட்சிகளைவிட, சிரிக்கும் காட்சிகளில் நடிப்பதுதான் சிரமமாக இருந்தது.

இவ்வாறு துருவ் விக்ரம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in