

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் அஜய் ரத்னம். அவரது V Square விளையாட்டுக் கூடத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் திறந்து வைத்தார்.
இந்த விழாவைத் தொடர்ந்து இளையராஜா 75 மற்றும் தன் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விஷால் பதிலளித்ததாவது:
''இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமன்றி இந்தி திரையுலகில் இருந்தும் பலரும் வருகிறார்கள். பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சிலர் இப்போதே கண்டிப்பாக வருவதாக உறுதி செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் இன்னும் ஓரிரு நாட்கள் உறுதி செய்வார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் இருந்தால் பார்க்க சந்தோஷமாக இருக்கும். 1000 படங்கள், 75 ஆண்டுகள் என இதே போன்றதொரு சாதனையை இன்னொருவர் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
மற்றொரு பெண்ணுடைய போட்டோ போட்டு, என் திருமணச் செய்தியை தவறாகப் போட்டிருந்தார்கள். நான் திருமணம் செய்யவுள்ள பெண்ணின் பெயர் அனிஷா அல்லா ரெட்டி. பிப்ரவரி 2-ம் தேதிக்குப் பிறகு நிச்சயதார்த்தம் எப்போது என்பது தெரியவரும். ஜூன் அல்லது ஜூலையில் நடிகர் சங்கக் கட்டிடம் முடிந்துவிடும். அங்கு நடைபெறும் முதல் முகூர்த்தமாக என் திருமணம் இருக்கும்''.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.