

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படக்குழுவினருமே போட்டி போட்டு வசூலை அறிவித்துள்ளனர்.
ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில் எது வசூல் அதிகம் என்பதில் ரஜினி - அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறார்கள். தமிழக வசூல் நிலவரப்படி 'விஸ்வாசம்' படமும், உலகளாவிய வசூல் நிலவரப்படி 'பேட்ட' படமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு படத்துக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் 'பேட்ட' படத்தின் வசூலை ட்விட்டரில் தினமும் வெளியிட்டு வந்ததற்கு, "நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக 'பேட்ட' படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் எண்களை கூறுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இருந்து எங்களுக்கே அதிகாரபூர்வ தகவல் வரவில்லையே" என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு இடையே கடும் போட்டி உருவெடுக்கத் தொடங்கியது. 'பேட்ட' படத்தின் வசூல் தொடர்பாக முன்னணி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், "வரும் ஞாயிற்றுகிழமையோடு, அதாவது 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியைக் கடக்கும். இது முதல் முறை. விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாகச் சொல்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே சந்தோஷமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சன் பிக்சர்ஸ் “இது தான் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட். முன்னணி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் வரும் ஞாயிற்றுகிழமையிலிருந்து 11 நாட்களிலிருந்து 100 கோடி வசூலைத் தொடும் முதல் தமிழ்ப் படமாக 'பேட்ட' இருக்கும்” என்று தெரிவித்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்டுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் "பங்காளிகளா.. மிகப்பெரிய விஸ்வாசம் படத்துடைய அறிவிப்பு இன்னும் 5 நிமிடத்தில்" என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, "அங்காளி பங்காளியோட ஆதரவுல 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்று வரை 125 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. நன்றி மக்களே" என்று அதிகாரபூர்வமாக அறிவித்து ஆச்சர்யமளித்தது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர். ரஜினி ரசிகர்களோ 'விஸ்வாசம்' படக்குழுவினரின் அறிவிப்பைக் கிண்டல் செய்து ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இரண்டு படக்குழுவினரின் இந்த நேரடி வசூல் அறிவிப்பு மோதலால், ட்விட்டர் தளத்தில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள்.