

குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் 'பேட்ட' என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. மேலும், தெலுங்கிலும் ஜனவரி 10-ம் தேதியே வெளியீடு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
அப்போது 'பேட்ட' படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது:
''ஹைதராபாத் வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனது முதல் படம் 'பீட்சா' இங்கும் வெளியானது. ஆந்திரப் பிரதேச மக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. அப்போதிலிருந்தே இங்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் உணர்வேன்.
'பேட்ட' எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். இந்த வாய்ப்பைக் கொடுத்த சன் பிக்சர்ஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் 'பேட்ட'. தலைவர் பாணியில் நிறைய ஆக்ஷன் படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாவது இன்னும் அந்த மனநிலையை உற்சாகமாக்கும்.
அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (வினய விதேய ராமா மற்றும் என் டி ஆர் பயோபிக்) வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான். அதனால், 'பேட்ட' அதற்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்''.
இவ்வாறு கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.