

சிம்பு, தனுஷுடன் நடித்த ரிச்சா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
2010-ல் ராணாவுடன் 'லீடர்' என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. அதனைத் தொடர்ந்து தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் 'மயக்கம் என்ன' படத்தில் நடித்திருந்தார். சிம்புவுக்கு நாயகியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்தார்.
'மயக்கம் என்ன', 'ஒஸ்தி' ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழில் எந்தவொரு படத்திலுமே ரிச்சா நடிக்கவில்லை. மேலும், 2013-ம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகியே இருந்தார். வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றார்.
தன்னுடன் படித்த ஜோவை காதலித்து வந்துள்ளார் ரிச்சா. தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக ரிச்சா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நானும் ஜோவும் பிஸினஸ் ஸ்கூலில் 2 வருடங்களுக்கு முன்புதான், முதன்முதலாகச் சந்தித்துக் கொண்டோம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல காத்திருக்கிறோம். இன்னும் திருமணத் தேதி முடிவாகவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.