

தமிழக அரசுப் பேருந்தில் 'பேட்ட' படம் ஒளிபரப்பாகியுள்ள வீடியோ பதிவால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது தொடர்பாக விஷால் காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகம் பைரசியால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இதனை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும் அன்றே, அதன் திருட்டு டிவிடி வெளியாகிவிடுகிறது.
மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும், இப்பிரச்சினைக்கு முடிவுக்கு வராமல் தத்தளித்து வருகிறது தமிழ் திரையுலகம்.
இதில் மற்றொரு பேரதிர்ச்சியாக, ஜனவரி 10-ம் தேதி வெளியான 'பேட்ட' படத்தை தமிழக அரசு பேருந்துகளிலேயே ஒளிபரப்பியுள்ளனர். கரூரிலிருந்து சென்னை வரும் தமிழக அரசுப் பேருந்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்காக வீடியோ ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்கள்.
இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக அரசு பேருந்துகளில் எப்படி புதுப்படங்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் “இப்போதாவது தமிழக அரசு பைரசி தொடர்பாக நடவடிக்கை எடுங்கள். இதோ தமிழக அரசுப் பேருந்தில் புதிய படங்கள் திரையிடப்படுவதற்கான ஆதாரம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்தக்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.