

தனக்கு அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் நடிகர் அஜித் குமார். கடந்த ஞாயிறு அன்று (ஜன 20) திருப்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் அஜித் ரசிகர்கள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட நூறு பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், “அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்” என்று கூறினார். இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர பொது சமூகத்திடமிருந்து பெருமளவில் விலகிய இருக்கும் அஜித் மீது அரசியல் சாயம் பூசப்பட்டது. அதற்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.
ரஜினி, விஜய்…. அடுத்து அஜித்
மத்திய அரசையும் இந்தியாவின் பல மாநிலங்களையும் ஆண்டுகொண்டு வலுவான நிலையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் தலைதூக்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வலுவாக இருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளின் செல்வாக்கால் இங்கு வேறெந்த தேசியக் கட்சியுமே செல்வாக்கு பெற முடியவில்லை. இருந்தாலும் பாஜகவுக்கு தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கிடைக்காமல் போனதற்கு அது ஒரு இந்துத்துவ ஆதரவுக் கட்சி என்பதும் முக்கியக் காரணமாகும்.
இந்து மதத்தின் தீவிரப் பற்றாளரான நடிகர் ரஜினிகாந்தை தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவைக்க அக்கட்சி பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த ரஜினி 2004 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடனான பிணக்கு காரணமாக அக்கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு ரஜினி தன் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது பாமக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது. எனவே ரஜினியின் வாய்ஸ் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவானதாகவே இருந்தது.
இந்த ஒரு நிகழ்வைத் தவிர வேறு எப்போதும் தேர்தல் அரசியலில் ரஜினி, பாஜகவுக்கு ஆதரவாகப் பேசியதில்லை. 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ரஜினியை அவரது வீட்டுக்கு வந்து சந்தித்தார். ஆனால் அப்போதும் ரஜினி பாஜகவைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. இப்போது அரசியல் வருகையை அறிவித்துவிட்ட ரஜினி, அவ்வப்போது நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசுகிறாரே தவிர பாஜகவுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பாஜகவுக்கு ஆதரவானவர் என்ற பார்வை தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயல்படுவதாகவே தெரிகிறது.
2014-ல் தமிழகத்துக்கு வந்த மோடி, நடிகர் விஜய்யையும் சந்தித்தார். ஆனால் விஜய்யும் பாஜகவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. அதோடு பாஜகவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட விதத்தை விமர்சித்தார். 2017-ல் வெளியான அவரது 'மெர்சல்' படம் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்ததாக தமிழக பாஜகவினரின் கடும் எதிர்ப்பைப் பெற்றது. அக்கட்சியில் தேசியச் செயலர் ஹெச்.ராஜா விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு விமர்சித்தது பெரும் சர்ச்சையானது.
இரண்டு நட்சத்திர நடிகர்களும் பிடி கொடுக்காத சூழலில் இன்னொரு முன்னணி நட்சத்திரமும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருப்பவருமான அஜித்தின் ஆதரவைப் பெறும் முயற்சியாகவே தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சு பார்க்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் தமிழக இளைஞர்கள் பாஜகவை மீம்ஸ்கள் மூலம் கடுமையாக விமர்சித்துவரும் வேளையில் அஜித் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடும் என்ற பார்வை ஏற்படுவதன் அபாயத்தை அஜித் உணர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. இதனால்தான் மிக மிக அரிதான சூழல்களில் மட்டுமே அறிக்கை வெளியிடும் அஜித் நேற்று தனக்கும் தன் படங்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அரசியலில் தன் பங்கு வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தும் வகையில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மீதான மரியாதை
அதே அறிக்கையில் தனக்கும் அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்றும் அது தனது தனிப்பட்ட விஷயம் என்பதையும் அஜித் தெரிவித்திருக்கிறார். அரசியலிலிருந்து விலகியே இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர் அஜித். அதனால் அவர் அதிமுகவுக்கு நெருக்கமானவர் என்ற பேச்சும் பல ஆண்டுகளாக அடிபட்டுவருகிறது. இதை அங்கீகரித்தோ மறுத்தோ அவர் ஒருமுறைகூடப் பேசியதில்லை. ஆனால் ஜெயலலிதா மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது என்பதைத் தெளிவுபடுத்த பல்வேறு சான்றுகள் இருக்கின்றன.
2011-ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது பல்வேறு நடிகர்களும் திரைத் துறை பிரமுகர்களும் ஜெயலலிதாவை சென்று சந்தித்தபோது அஜித்தும் அவரைச் சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ''ஒரு முதல்வராக அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். அவரிடம் நல்லபெயர் வாங்கும் முயற்சியில் அவரைச் சந்தித்து அவரது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை'' என்று அஜித் சொன்னதாக ஒரு தகவல் உலவியது.
2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா அகால மரணம் அடைந்தபோது ‘விவேகம்’ படப்பிடிப்புக்காக ஐரோப்பாவில் இருந்தார். மரணச் செய்தி வெளியான ஒரு சில மணிநேரத்தில் அவரது இரங்கல் அறிக்கை வெளியானது. அதோடு, உடனடியாக விமானம் ஏறி சென்னைக்குப் பயணமானார். இருந்தாலும் தொலைவு காரணமாக ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் அவரால் சென்னைக்கு வர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித் சென்னை வந்த அன்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளரும் புகழ்பெற்ற அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கலைஞர் தீர்த்துவைத்த பிணக்கு
கடந்த பல ஆண்டுகளாக பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறார் அஜித். தனக்கு விருது வழங்கப்படும் விழாக்களில்கூட பங்கேற்க மாட்டார். மிக மிக அரிதான சில விழாக்களில் பங்கேற்கவும் செய்வார். 2010-ல் திரைத் துறை சார்பாக அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசியபோது முதல்வர் முன்னிலையில், ''திரைத் துறை சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
அதே மேடையில் கலைஞர் அருகில் அமர்ந்திருந்த ரஜினி இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைதட்டினார். வேறு சில நடிகர்களும் இந்தத் துணிச்சலான செயல்பாட்டுக்காக அஜித்தைப் பாராட்டினார்கள். ஆனால் திமுகவினரும் ஆதரவாளர்களும் இதனால் புண்பட்டனர்.
ஆனால் அரசியல் களத்தில் இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து கலைஞரின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்தார் அஜித். அந்தச் சந்திப்புக்குப் பின் தனக்கு அஜித் மீது எந்த வருத்தமும் இல்லை என்று கலைஞர் தெளிவுபடுத்தினார்.
2018-ல் ஆகஸ்ட் 7 அன்று கலைஞர் மறைந்தபோதும் அஜித் உடனடியாக இரங்கல் அறிக்கை வெளியிட்டார். கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று இறுதி அஞ்சலியும் செலுத்தினார் அஜித்.
அரசியல், பொது விவகாரங்கள் எதைப் பற்றியும் கருத்து சொல்லாமல் விலகியே இருக்கும் அஜித், தமிழகத்தை மாறி மாறி ஆண்ட இரு பெரும் தலைவர்கள் வாழ்ந்தபோதும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தத் தவறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
அரசியல் கடமை தவறாதவர்
அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும், சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டியதையும் நேற்றைய அறிக்கையில் வலியுறுத்தியிருப்பதைப் போலவே அவற்றைத் தன் வாழ்விலும் கடைப்பிடித்துவருகிறார். ஒவ்வொரு தேர்தலின்போது சென்னையில் இருப்பதை உறுதி செய்துகொண்டு அதிகாலை தவறாமல் வந்து வாக்களித்துவிடுவார். வாக்குச்சாவடியில் நடிகர் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தாமல் பொதுமக்களோடு வாக்களிப்பதற்கான வரிசையில் நிற்கும் அஜித்தின் புகைப்படம் இன்றும் அவரது ரசிகர்களால் பெருமையுடன் பகிரப்படுகிறது.
தன் படங்களையும் அவற்றைப் பார்த்து தன் ரசிகர்களானவர்களையும் எந்த வகையிலும் அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டேன் என்று அஜித் தன் அறிக்கையில் கூறியிருப்பது முக்கியமானது. தமிழகத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் நெருக்கம் வலுவானது.
தமிழகத்தில் முதல்வராக இருந்த ஐவர் சினிமாத் துறையில் பணியாற்றியவர்கள். ஆனால் அவர்கள் முதல்வரானதற்கு அவர்களது சினிமா செல்வாக்கு மட்டும் காரணமல்ல. அரசியல் களத்திலும் அவர்கள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து மக்கள் நம்பிக்கையை வென்ற பிறகுதான் அரசியலில் ஜெயிக்க முடிந்தது. தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வென்று எம்.எல்.ஏ ஆன விஜயகாந்துக்கும் இது பொருந்தும். ஆனால் இதைப் புரிந்துகொள்ளாமல் சினிமா செல்வாக்கை வைத்தே அரசியலில் சாதித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய ரசிகர் படை இருந்தும் அந்தச் செல்வாக்கை வைத்து அரசியல் கனவு காணாமல் இருக்கும் அஜித் உண்மையிலேயே பாராட்டத்தக்கவர்தான்.