

முன்பு 'ஸ்டார்' அஜித், இதில் 'நடிகர்' அஜித் என்று 'விஸ்வாசம்' குறித்து இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், நாளை (ஜனவரி 10) பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.
இந்நிலையில் 'விஸ்வாசம்' தொடர்பாக இயக்குநர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, 'விஸ்வாசம்' கதையைத் தான் அஜித் சார்க்கு விளக்கினேன். அவருடைய ரியாக்ஷன் ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு கதை கேட்கும் போதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து சிரித்ததை பார்த்ததில்லை. உண்மையில், இது போன்ற ஒரு பொழுதுபோக்கு ஸ்கிரிப்ட் எனக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது என்றார்.
இப்படத்தில் அஜித் சார் மதுரை மண்ணின் மைந்தன், எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும், அதே சமயம் எமோஷனலான ஒருவரை பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, 'தூக்குதுரை' கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அஜித் சார் உடனான என் முந்தைய படங்களை விட 'விஸ்வாசம்' படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான தருணங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு.
அஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாரா மேடமும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புவார்.
அஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே 'விஸ்வாசம்' எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். இதுவரை நான் பார்த்திராத பல வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். ரசிகர்களாக எப்பொழுதும் ஸ்டார் அஜித்தை பார்த்து ரசித்துள்ளோம், பார்வையாளர்கள் இதில் நடிகர் அஜித்தையும் அதனோடு சேர்த்து பார்ப்பார்கள்.
நயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். 'விஸ்வாசம்' படத்தில் விவேக் சார், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், கோவை சரளா மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பது எங்களுக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.
இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்