

ஃபர்ஸ்ட் லுக் எப்போது என தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததற்கு, இயக்குநர் ராஜேஷ் பதிலளித்துள்ளார்.
'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, ராதிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால், பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், பொங்கல் கழித்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக்காக காத்திருக்கிறோம் என்று #WaitingForSK13FL ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''அன்பார்ந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் நண்பர்களே. உங்களை இவ்வளவு நாள் காத்திருக்க வைத்தமைக்கு மன்னித்து விடுங்கள். sk13 படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கடைசி கட்ட வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
2019 கோடை விடுமுறை வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி பற்றி விரைவில் அறிவிக்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி''.
இவ்வாறு இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.