

கல்லூரி மாணவிகள் 9 பேரை, பாடகிகளாக அறிமுகப்படுத்தியுள்ளார் இளையராஜா.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில், இளையராஜா நேரடியாகக் கலந்து கொண்டார். மாணவர்கள் கேள்விக்குப் பதிலளித்ததோடு மட்டுமின்றி, பல பாடல்களைப் பாடியும் அவர்களை மகிழ்வித்தார். அத்துடன், மாணவிகளும் இளையராஜாவின் பல பாடல்களைப் பாடி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
சென்னையிலுள்ள ராணி மேரி கல்லூரி மற்றும் எத்திராஜ் கல்லூரி மாணவிகள், ‘நாங்கள் சினிமாவில் பாட முடியுமா?’ என விழா மேடையிலேயே இளையராஜாவிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளையராஜா, தன்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சில மாணவிகளை வரவழைத்துக் குரல் தேர்வு நடத்தினார்.
அதிலிருந்து 9 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, தான் இசையமைக்கும் ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாடவைத்து, மாணவிகளாக இருந்தவர்களைப் பாடகிகளாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தை, பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.