வெண்ணிலா கபடி குழு வெளியாகி 10 ஆண்டுகள்: இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சி

வெண்ணிலா கபடி குழு வெளியாகி 10 ஆண்டுகள்: இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'வெண்ணிலா கபடி குழு' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வெண்ணிலா கபடி குழு'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 

இப்படத்தின் மூலமாக இயக்குநராக சுசீந்திரனும், நாயகனாக விஷ்ணு விஷாலும் அறிமுகமானார்கள். 10 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து மிகவும் நெகிழ்வுடன் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''ஜனவரி 29 இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. 2009 இதே தேதியில் 'வெண்ணிலா கபடி குழு' ரீலீஸ் ஆச்சு. இன்றோடு 10 வருடங்கள் முழுமை அடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். 

இந்த 10 வருடத்தில் என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக முக்கியமாக எனது நண்பர்கள், எனது உதவி இயக்குநர்கள், எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.

இந்த நாளில் எனக்கு முதல் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆனந்த் சக்ரவர்த்திக்கும், இணை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன், அப்சர் ஆகியோருக்கு நன்றி. என் முதல் படத்தில் அறிமுகமான விஷ்ணு, சூரி, அப்புக்குட்டி, ஒளிப்பதிவாளர் லட்சுமணனுக்கு எனது வாழ்த்துகள். இசையமைப்பாளர் செல்வ கணேஷுக்கும் எனது வாழ்த்துகள்.

என்னுடன் முதல் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் காசி ஆனந்தன், கலை இயக்குநர், நடிகர் மற்றும் நண்பர் கிஷோர் அனைவருக்கும் நன்றி. பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றி''.

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

'வெண்ணிலா கபடி குழு' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தற்போது இயக்கி வரும் 'கென்னடி கிளப்' படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்படத்தில் நடித்து வரும் இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் இயக்குநர் சுசீந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in