

'இந்தியன் 2' படம் தொடர்பான ட்வீட்டுக்கு எழுந்த சர்ச்சை தொடர்பாக விவேக் விளக்கம் அளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற 'இந்தியன்' படத்தின் 2-ம் பாகம் என்பதால், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
'இந்தியன் 2' படத்துக்கு நடிகர் விவேக் "இந்தியன் 2 படத்துக்காக ஷங்கருக்கும், கமல்ஹாசனுக்கும் வாழ்த்துகள். முதல் பார்வை போஸ்டர் செம்ம. இந்தியன் படத்தை அழகாக நினைவுகூர்கிறது. இன்றைய காலத்தின் தேவை இந்தப் படம். இதற்காகத்தான் நாம் காத்திருந்தோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
ட்விட்டர் பக்கத்தில் விவேக்கைப் பின் தொடர்பவர்கள் பலருமே, 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவும், கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இந்த வாழ்த்தா என கேள்வி எழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக விவேக் "நான் பள்ளி நாட்களிலிருந்து கமல்ஹாசனின் ரசிகன். 1975-ல் 'அபூர்வ ராகங்கள்' சமயத்திலிருந்து. நான் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
அவருடன் இணைந்து நடித்துள்ளேனோ இல்லையோ, இன்று வரையிலும் நான் அவரது ரசிகனே. கதைக்குத் தேவைப்பட்டால் ஷங்கர் கண்டிப்பாக என்னைக் கூப்பிடுவார். இதோடு இதுபற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் விவேக் நடித்துவிட்டார். ஆனால், கமலுடன் மட்டும் இன்னும் எந்தவொரு படத்திலுமே நடிக்கவில்லை. ஷங்கர் இயக்கத்தில் 'பாய்ஸ்', 'சிவாஜி', 'அந்நியன்' படங்களில் விவேக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.