விஜய் சேதுபதிக்கு ரஜினி அறிவுரை
'பேட்ட' படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதிக்கு ரஜினி அறிவுரை வழங்கியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தக்கி, சசிகுமார் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்தக்கி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே விஜய் சேதுபதி ரஜினி அறிவுரை வழங்கியுள்ளார்.
”படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போது தான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் அப்புறமாக தயாரிக்கலாம்” என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளார் ரஜினி.
'ஆரஞ்சு மிட்டாய்', 'மேற்கு தொடர்ச்சி மலை', 'ஜூங்கா' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. தற்போது, அப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள்.
தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
