Published : 20 Dec 2018 04:06 PM
Last Updated : 20 Dec 2018 04:06 PM

இது எவ்வளவு பெரிய அவமானம்? விஷாலை விளாசிய பாரதிராஜா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய விஷாலுக்கு எதிராக இன்னொரு குழுவினர் பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட இந்தக்குழுவினர், தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்டதுடன், தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்தனர்.

முதல்வரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, “அமைப்பு சார்ந்திருந்தால் சில விதிமுறைகள் உண்டு. தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை ஏற்றதும், சில விதிமுறைகள் இருக்கின்றன. பொதுக்குழு கூட்டி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இரண்டு துணைத் தலைவர்கள் சங்கத்தின் பக்கம் வந்தே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.

அத்துடன், இந்தச் சங்கத்தின் அறக்கட்டளையில் 7 கோடி ரூபாய் பணம் இருந்தது. கேள்வி கேட்டால் பதில் சொல்வது தலைமையின் பொறுப்பு. அப்படிப் பதில் சொல்லாததினேலேயே இந்த நாட்டில் பல விபரீதங்கள் நடந்துள்ளன. 7 கோடிக்காண கணக்கைக் கேட்டால், இதுவரை பதில் இல்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான பதிவு அலுவலகம் ஒன்று இருக்க வேண்டும். அங்குதான் எல்லாவிதமான கணக்கு வழக்குகளும் இருக்க வேண்டும், விவாதங்களும் நடக்க வேண்டும். எல்லா முடிவையும் அங்குதான் எடுக்க வேண்டும்.

ஆனால், தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன், இந்தப் பதிவு அலுவலகம் இல்லாமல், வேறொரு அலுவலகத்தைத் தன்னிச்சையாக வாடகைக்கு எடுத்து, அங்குதான் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படுகிறது என்றால், இது எவ்வளவு பெரிய அவமானம்? இதில் ஏதோ ஒரு மறைவு இருக்கிறது.

இந்த சங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆக, நீங்கள் இன்னொரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதற்கும் சங்கம் மூலம் வாடகை செலுத்துகிறீர்கள். அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? இதுதான் கேள்வி.

இதற்கு பதில் சொல்ல வரும்படி அழைத்தால், நிர்வாகிகள் யாருமே வரவில்லை. எனவே, வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தைப் பூட்டிவிட்டோம். இதற்கு மையமாக இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது அரசுதான். எனவே, அரசிடம் எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம். இதைத் தீர்ப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x