

'சீதக்காதி' படத்தில் டெலிட்டட் சீனே கிடையாது என்று அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் தெரிவித்தார்.
படத்தொகுப்பாளர் ஜீவா பொன்னுச்சாமி எழுதிய 'படத்தொகுப்பு: கலையும் அழகியலும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எடிட்டர் மோகன், ஓவியர் மருது, பேராசிரியர் சோர்ணவேல், 'நிழல்' ஆசிரியர் திருநாவுக்கரசு, எடிட்டர் சாபுஜோசப், இயக்குநர் பாலாஜி தரணிதரன், எடிட்டர் ப்ரவீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், ''நான் முதன்முதலில் சென்னை திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங்தான் கற்றுக்கொண்டேன். கதை எழுதுவது அதை வடிவமைப்பது குறித்த பல எண்ண ஓட்டங்கள் எனக்கு இருந்தன. திரைக்கதை, இயக்கத்துக்கு முன்பு எடிட்டிங் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று அதைப் படித்தேன். அதற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங் படித்தேன்.
நான் சொல்வது உங்களுக்கு அதீதமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், எடிட்டிங்தான் உண்மையான ஃபிலிம் மேக்கிங். எனக்கு எடிட்டிங் தெரியும் என்பதால் காட்சிகளை எப்படி எடுப்பது என்று திட்டமிடுவது எளிதாகிறது. எடிட்டிங் தெரிந்த ஒருவர்தான் சிறந்த இயக்குநராக முடியும் என்று நம்புகிறேன். 'சீதக்காதி' படம் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. அதில் எந்தக் காட்சியையும் நீக்கவில்லை. டெலிட்டட் சீனே இல்லாததற்குக் காரணம் எடிட்டிங் கற்றுக்கொண்ட பிறகு இயக்குநரானதுதான்'' என்றார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படத்தில் 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இது அவரது 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனா, பார்வதி, காயத்ரி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.