

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஜிகர்தண்டா’. காமெடி கேங்ஸ்டர் படமான இதில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்துக்கு, கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்தார்.
படம் பார்த்த அனைவரும், இந்தப் படத்தைக் கொண்டாடினர். ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இது என்று சொன்னதும், முன்பே சொல்லியிருந்தால் நானே இந்தப் படத்தில் நடித்திருப்பேன் என ரஜினி கூறினார். அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. அத்துடன் 2 தேசிய விருதுகளையும் வென்றது. சிறந்த துணை நடிகருக்கான விருதை பாபி சிம்ஹாவும், சிறந்த எடிட்டருக்கான விருதை விவேக் ஹர்ஷனும் பெற்றனர்.
இந்தப் படம், கன்னடத்தில் ‘ஜிகர்தண்டா’ என்ற பெயரிலேயே 2016-ம் ஆண்டு ரிலீஸானது. இந்நிலையில், தெலுங்கிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகின்றனர். ஹரிஷ் சங்கர் இயக்கவுள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும், சித்தார்த் கதாபாத்திரத்தில் நாக செளரியா அல்லது ராஜ் தருண் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வருகிற பொங்கல் பண்டிகையில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.