

3டி-யில் உருவாகும் படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
2018-ல் அதிக படங்களில் நடித்த காமெடி நடிகர் யார் என்றால் கண்டிப்பாக அது யோகி பாபு. 2019-ம் ஆண்டில் அவரை முக்கியக் கதாபாத்திரத்தில் வைத்து 'கூர்கா', 'தர்மபிரபு' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இப்பட்டியலில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளது.
No.1 Productions தயாரிக்கவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சிவா இயக்கவுள்ளார். இதில் யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் விநாயக் சிவா கூறியிருப்பதாவது:
''இப்படத்தை 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று சொல்வதை விட 'குறும்பு' வகையான படம் என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போல் கதை அமைந்துள்ளது. இக்கதையினை எழுதும்போது கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். மேலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்கவுள்ளோம். சில முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். விரைவில் அது சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளியாகும்''.
இவ்வாறு இயக்குநர் விநாயக் சிவா தெரிவித்துள்ளார்.
'2.0' படத்தில் பணிபுரிந்த பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரியவுள்ளனர். இப்படம் 3Dதொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் அடல்ட் ஹாரர் காமெடிப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.