

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒரு காதல் படம் ரசிகர்களைக் குறிப்பாக காதலர்களைச் சொக்கவைத்து பெரும் வெற்றிபெறும். திரையுலக வரலாற்றிலும் நீங்கா இடம் பிடிக்கும் அந்தப் படங்களுக்கு ஒரே ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் காணலாம்.
அந்தப் படங்கள் அனைத்திலும் மொத்த இசை ஆல்பமும் அல்லது ஒன்றிரண்டு பாடல்களாவது மிகப் பெரிய வெற்றி பெற்று அவையும் இசை ரசிகர்களின் விருப்பப் பாடல் பட்டியலில் நீங்கா இடம் பிடிக்கும். ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ (இதயம்), ‘உனைக் காணவில்லையே நேற்றோடு’ (காதல் தேசம்), ‘என்ன விலை அழகே’ (காதலர் தினம்), ‘நலம் நலம் அறிய ஆவல்’ (காதல் கோட்டை), ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ (பூவே உனக்காக), ‘ஸ்நேகிதனே’ (அலைபாயுதே), ‘வெண்மதி’ (மின்னலே), ‘மன்னிப்பாயா’ (விண்ணைத்தாண்டி வருவாயா)’ என இந்தப் பட்டியல் நீள்கிறது.
2018-ல் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்றாக ‘96’ இடம்பெற்றதைப் போலவே அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதல் தனிப் பெரும் துணையே’ பாடலும் முன்னாள், இந்நாள் காதலர்களின் தேசிய கீதமானது. இசை ரசிகர்களின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தது.
இதற்கு முன்பே ஒரு சில படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் ‘96’ தான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு அழுத்தமான முகவரியாக அமைந்தது. அவரது பெயரை இளைஞர்கள் அனைவரையும் உச்சரிக்க வைத்தது. இது படம் வெளியான பின்போ இசைவெளியீட்டுக்கு பின்னோ நிகழவில்லை. ‘காதலே காதலே’ பாடலின் அறிமுக டீஸர் வெளியான நொடியிலிருந்தே கோவிந்த் வசந்தாவின் நதிமூல ரிஷிமூலங்கள் சமூக வலைத்தளங்களில் அலசப்படத் தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு அந்தப் பாடலின் ஒரு சில வரிகளே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ‘96’ படத்துக்கு ஆகப் பெரிய ப்ரமோஷனாக அமைந்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளைப் பன்மடங்கு கூட்டியது.
இதையடுத்து ‘காதலே காதலே’ பாடல் தனி சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டு ரசிகர்களை காதல் இசை மயக்கத்தில் ஆழ்த்தியது. பலரது காலர் ட்யூனாகவும் வாட்ஸப் ஸ்டேட்டஸாகவும் அந்தப் பாடல் இடம்பெற்றது.
2018 அக்டோபர் 4 அன்று ‘96’ திரைப்படம் வெளியான பிறகு படத்தில் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த விதம் அதனை மென்மேலும் உன்னதமாக்கியது. கதைப்படி பள்ளியில் தங்கள் காதலை தெரிவித்துக்கொள்ளாமலேயே பிரிந்துவிட்ட ராமும் ஜானுவும் கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்பும் நழுவிப் போய்விடுகிறது. ஆனால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ராமும் ஜானுவும் தனியாகக் கழிக்கும் இரவுப் பொழுதில் ராமின் மாணவிகளை சந்தித்தவுடன் ஜானு அந்தக் கல்லூரியில் ராமும் தானும் சந்தித்துக்கொண்டதாகவும் அதன் மூலம் தங்கள் காதல் புதுபிக்கப்பட்டதாகவும் கற்பனையாகக் கூறுவது போல் ஒரு காட்சி அமைந்திருக்கும்.
ஜானுவின் அந்தக் கற்பனை காட்சியாக விரியும்போது ராமும் ஜானுவும் சந்தித்து காதலைப் பரிமாறிக்கொள்ளும்போது ‘காதலே காதலே தனிப்பெரும்துணையே’ என்ற பாடல் ஒலித்தது. அதைக் கேட்டு ஒட்டுமொத்த திரையரங்கமும் உணர்ச்சிப் பெருக்கடைந்தது. படத்தை தங்களது காதலருடன் பார்த்தவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டனர். பழைய காதலின் நினைவுகளுடன் பார்த்தவர்களின் கண்களின் ஓரத்தில் நீர் கசிந்தது. இந்த அளவுக்கு ‘காதலே காதலே’ பாடலின் தாக்கம் இருந்தது.
படம் வெளியான பிறகு ‘காதலே காதலே’ பாடலை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் புழங்கும் இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல. தங்கள் கடந்த காலக் காதலின் நினைவுகளைப் புதைத்து இன்று கணவன்/மனைவி, குழந்தைகள் என்று குடுமபம் நடத்திக்கொண்டிருக்கும் நடுத்தர வயதினரும்தான். அவர்கள் தொலைந்துவிட்ட தங்களின் ராம் அல்லது ஜானுவின் நினைவுகளை இந்தப் பாடல் கிளறியது.
காதலர்கள் அல்லது காதலைத் தொலைத்தவர்களுக்கு மட்டுமல்ல. காதலில் இல்லாதவர்கள் காதல் கிடைக்கப்பெறாதவர்களான தனியர்களுக்கும் காதலின் அழகை மேன்மையை உன்னதத்தை இந்தப் பாடல் உணர்த்தியது. தங்களுக்குக் கிடைக்கப் போகும் ராமையோ ஜானுவையோ நினைத்து ஏங்க வைத்தது. அந்த வகையில் தனியர்களுக்கும் தனிப்பெருந்துணையாக அமைந்தது இந்தக் காதல் பாடல்.