

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.
இதனிடையே புதிய வெப் சீரியஸ் ஒன்றை படமாக்கி வருகிறார் கவுதம் மேனன். இது முழுக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டதாகும். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோமன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 30 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ள இந்த வெப்-சீரியஸ் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
எப்போதுமே, இணையத்தின் வளர்ச்சியை சரியாக பயன்படுத்துபவர் கவுதம் மேனன். யூ-டியூப் தளத்திற்காகவே ஒரு பாடலை உருவாக்கி, படமாக்கி வெளியிட்டு வருகிறார். அதில், அடுத்த முயற்சியாக வெப்-சீரியஸிம் கால்பதித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ப்ரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.