அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என அனிருத்தைப் புகழ்ந்த தனுஷ்: ரகசியம் உடைத்த ரஜினி

அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என அனிருத்தைப் புகழ்ந்த தனுஷ்: ரகசியம் உடைத்த ரஜினி
Updated on
1 min read

அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்துதான் என்று தனுஷ் சொன்னதாக பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

பேட்ட படத்துக்கு அனிருத் பிரமாதமா இசையமைச்சிருக்கார். அனிருத்தை குழந்தைலேருந்தே பாத்துக்கிட்டிருக்கேன். இப்பவும் இளம் வயசுதான். ஆனா இந்தச் சின்ன வயசுலயே இசைல மிகப்பெரிய ஜாம்பவானா இருக்கார் அனிருத்.

இதுக்கு அவங்க அப்பா ரவிச்சந்திரனும் அம்மா லக்ஷ்மியும்தான் காரணம். அனிருத் குழந்தையா இருக்கும் போதே, அவர்கிட்ட இருந்த இசையார்வத்தைப் புரிஞ்சுக்கிட்டாங்க. அனிருத்தை மியூஸிக்கெல்லாம் கத்துக்க வைச்சாங்க. சின்ன வயசிலேயே நிறைய மியூஸிக் க்ளாஸுக்கெல்லாம் போனாரு.

கார்த்திக் சுப்பராஜ், பேட்ட படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் சார்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். ஏன்னா, இதுவரை என் படத்துக்கு அவர் இசையமைச்சது இல்ல. அதனால ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

அனிருத், இசையமைக்க ஆரம்பிக்கும்போதே, அவரோட இசைத்திறமையைப் புரிஞ்சுக்கிட்டார் தனுஷ். ஒருநாள், அனிருத் எப்படி மியூஸிக் பண்றார்னு தனுஷ்கிட்ட கேட்டேன். அனிருத்துதான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான். மிகப்பெரிய ஆளா வருவார்னு தனுஷ் சொன்னார்.

அனிருத், நிச்சயம் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in