

'பேட்ட' ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ரஜினி சார்… த்ரிஷா, என் ஜானு சார் என்று சொல்ல, மொத்த அரங்கமும் கைத்தட்டி விசிலடித்து ஆர்ப்பரித்தது.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழு பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று (9-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
''ரஜினி சாரோட இந்த 'பேட்ட' படம் எப்படின்னா, செமயா, சும்மா ஸ்டைலா, கெத்தா, ஒரு கலாய்யா இருக்கும். படத்தோட கடைசி ஃப்ரேம்ல கூட சர்ப்ரைஸ் வைச்சுக்கிட்டே இருக்கார் கார்த்திக் சுப்பராஜ்.
ரஜினி சார் மாதிரி பேசச் சொல்லிக் கேக்கறீங்க. எனக்கு நடிக்கவே வராதுங்க. என்னை மாதிரிதான் எனக்கு நடிக்க வரும். கூத்துப்பட்டறைல சேரும் போது கூட, ரஜினி மாதிரி என்னால மிமிக்ரி பண்ணத் தெரியாதுன்னு சொன்னேன். நீ உன்னை மாதிரி நடி. அது போதும்னு சொன்னாங்க. அதனாலதான் இன்னிக்கு நடிகனா வந்து நிக்கிறேன்.
இந்த 'பேட்ட' எனக்கொரு புது அனுபவம். நிறைவேறாத கனவுன்னு சொல்லுவாங்க. நான் எதிர்பார்க்காத கனவு. நினைக்கவே நினைக்காத ஒரு கனவு. இப்ப நிறைவேறியிருக்கு.
இதோ.., த்ரிஷா இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே 96 படம், ஞாபகத்துக்கு வருது. ரஜினி சார்… இது என் ஜானு சார்'' என்று சொன்னார் விஜய்சேதுபதி.
அவ்வளவுதான். அரங்கில் இருந்த எல்லோருமே கை தட்டினார்கள். விசிலடித்தார்கள். அரங்கம் அமைதியாக சற்று நேரமானது.
ரஜினி உட்பட எல்லோருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்.