

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படம், கடந்த தீபாவளிக்கு வெளியானது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. கதையாகத் தயாராகிவிட்டாலும், திரைக்கதையை விரைவில் முடித்து ரஜினியிடம் சொல்ல இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் - சந்தோஷ் சிவன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் பணிபுரிந்துள்ளனர். ரஜினி - சந்தோஷ் சிவன் இணைந்து ‘தளபதி’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். எனவே, பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கிய ‘சர்கார்’ படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினி படமும் அரசியலை மையப்படுத்தி இருக்கும் என்பதால் இந்தத் தலைப்பு வைத்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.