

'ஜிப்ஸி' படத்திற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஜீவா இடம்பெறும் விளம்பரப் பாடலொன்றை படமாக்கியுள்ளது படக்குழு.
'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜூமுருகன். ஜீவா, நடாஷா சிங் ஆகியோருடன் குதிரை ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
காரைக்கால், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இப்படத்தை படமாக்கி முடித்துள்ளது படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது, இப்படத்தின் விளம்பரப் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு. இதில் ஜீவா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடம்பெற்றுள்ளனர். நல்லகண்ணு, பியூஷ் மனுஷ், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் 'ஜிப்ஸி' படத்துக்கு, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட் செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.