மெர்சல் சம்பள பாக்கி: மேஜிக் நிபுணர் வீடியோவால் மீண்டும் சர்ச்சை

மெர்சல் சம்பள பாக்கி: மேஜிக் நிபுணர் வீடியோவால் மீண்டும் சர்ச்சை
Updated on
1 min read

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக நடித்துள்ளார் விஜய். ஒரு காட்சியில் மேஜிக் மூலமாக சண்டையிடுவது போல படமாக்கியிருப்பார்கள். இச்சண்டைக்காட்சிகளில் பணிபுரிந்தவர் ராமன் சர்மா.

'மெர்சல்' படத்தில் இன்னும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கினார். மேலும், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலையும் ஸ்கிரீன் - ஷாட்டாக வெளியிட்டார். இவரது இந்த இரண்டு பதிவுமே ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக உருவானது.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 7) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் அவர் தொலைபேசியில் பேசுவது இடம்பெற்றுள்ளது.

அந்த உரையாடல் அப்படியே...

ராமன் சர்மா: 26  நவம்பர் அன்று நீங்கள் கண்டிப்பாக எனக்கு பணத்தைத் தந்துவிடுவதாகக் கூறினீர்கள். இன்று டிசம்பர் 6.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ்: கண்டிப்பாகத் தந்துவிடுவோம் ராமன்.

ராமன் சர்மா: ஆனால் எப்போது?

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் : அடுத்த ஒன்றிரண்டு நாட்களில். கண்டிப்பாக நான் உங்களை தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறேன்.

ராமன் சர்மா: நான் நீண்ட நாட்களாகக் காத்திருப்பது உங்களுக்குத் தெரியும். தேனாண்டாள் ஸ்டுடியோஸில் உங்கள் பொறுப்பு என்ன? நீங்கள் முரளியின் உதவியாளரா?

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் : நான் தான் தயாரிப்பில் இருக்கிறேன்.

ராமன் சர்மா: ஏன் நிறுவனத்திலிருந்து என்னைக் கூப்பிட்டு பேச முடியாதா?

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் : இன்னும் சில நாட்களில் பணம் உங்களுக்கு வந்துவிடும்.

ராமன் சர்மா: இன்னும் பல தரப்புக்கு பணம் பாக்கி என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் : எல்லோருக்கும் பணம் தரப்படும்.

ராமன் சர்மா: இன்னும் இரண்டு நாட்கள் தான் காத்திருப்பேன். பணம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவு போட்டுவிடுவேன்.

இவ்வாறு அந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்ற அதிருப்தியிலேயே இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இப்பிரச்சினையை முதலில் முடிக்குமாறு விஜய் ரசிகர்கள், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோரைக் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in