

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸான படம் ‘ராட்சசன்’. ராம்குமார் இயக்கிய இந்தப் படம், சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. போலீஸாக விஷ்ணு விஷால் நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்தார்.
ராதாரவி, காளி வெங்கட், வினோதினி, ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜிப்ரான் இசையமைத்தார். சமீபத்தில் வெளியான த்ரில்லர் படங்களிலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படம் இதுதான். நீண்ட நாட்கள் இந்தப் படம் தியேட்டரில் ஓடியது.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் இந்த மாதம் (டிசம்பர்) 21-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. காமெடிப் படமான இதை, செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் ஜோடியா ரெஜினா கெசான்ட்ரா நடித்துள்ளார்.
ஓவியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், ஆனந்த் ராஜ், யோகி பாபு, லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார்.
‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் போலீஸாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். ‘ராட்சசன்’ படம் வெளியாகி இரண்டரை மாதங்களிலேயே இந்தப் படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.