

'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ரஜினி நடித்த 'பேட்ட' படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் வியாபாரமும் தொடங்கி, தமிழக விநியோக உரிமையை கேஜேஆர் ஸ்டூடியோ பெரும் விலைக்கு கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து அஜித் படம் என்பதால் தொலைக்காட்சி உரிமை யாருக்கு என்பதில் போட்டி நிலவியது. இதில் சன் தொலைக்காட்சி பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது. பொங்கலுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் 'பேட்ட' உடன் தான் போட்டியிடுகிறது 'விஸ்வாசம்'. தற்போது அப்படத்தின் தொலைக்காட்சி உரிமையையே கைப்பற்றியுள்ளது சன் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கிறார்.
‘விஸ்வாசம்’ பணிகளை முடித்துவிட்டதால், வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.