

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதற்கு முன்பாக சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே தலைகாட்டி வந்தார்.
நாயகனாக அறிமுகமான பிறகு தொடர் வெற்றிகள் மூலம், தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். 2018-ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரைத் தட்டிச் சென்றுள்ளார்.
மேலும், 2019 பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
நடிப்பு, பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பு என பல தளங்களில் பணிபுரிந்து வரும் விஜய்சேதுபதி, தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். சன் தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இதன் ப்ரமோ வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. என்ன நிகழ்ச்சி, எப்போது ஒளிபரப்பு உள்ளிட்ட விஷயங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சன் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது.