Published : 12 Dec 2018 09:42 PM
Last Updated : 12 Dec 2018 09:42 PM

சர்ச்சை எழுப்ப முயற்சித்த செய்தியாளர்: சாதுர்யமாகக் கையாண்ட விஜய் சேதுபதி

சில வருடங்களுக்குப் பிறகு சேரன் இயக்கும் படம் ‘திருமணம்: சில திருத்தங்களுடன்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார். அதில், ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர் வேண்டுமென்றே குதர்க்கமாகக் கேள்விகள் கேட்க, அவற்றைச் சாதுர்யமாகக் கையாண்டார் விஜய் சேதுபதி.

அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இதோ...

வருகிற 20-ம் தேதி ‘சீதக்காதி’ படம் ரிலீஸாகிறது. எனக்கு ரொம்ப பெருமைக்குரிய படம் அது. நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் பார்க்கும்போது நம்மை மறந்து எப்படி சிரித்தோமோ, அந்த மாதிரி உணர்வை நிச்சயம் கொடுக்கும்.

நிருபர்: ‘சீதக்காதி’ படம் வெளிவருவதில் பிரச்சினை இருப்பதாகவும், தயாரிப்பாளர் சங்கமே பட வெளியீட்டைத் தடுப்பதாகவும் சொல்கிறார்களே...

விஜய் சேதுபதி: நிஜமாக எனக்குத் தெரியவில்லை.

நிருபர்: ‘96’, ‘சீதக்காதி’ என தொடர்ந்து உங்கள் படங்களுக்கு இப்படி பிரச்சினை வருகிறதே...

விஜய் சேதுபதி: ‘96’ படத்தைப் பொறுத்தவரைக்கும் தயாரிப்பாளருக்கு இருந்த கடன். இந்தப் படத்துக்கு அப்படி சொல்ல முடியாது. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப் பிரச்சினை இருந்தால், அதை தயாரிப்பாளர்தான் சந்திக்க வேண்டும். காலையில் கூட இயக்குநரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி நான் பேச முடியாது. பிரச்சினை தெரிந்தால் உங்களிடம் சொல்லலாம்.

நிருபர்: கஷ்டப்பட்டுப் படம் எடுக்குறாங்க, நடிக்கிறீங்க. ஆனால், படம் வெளியாகும்போது திரையரங்குகள் கிடைப்பதில்லை போன்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருக்கிறது. உங்கள் படம் மட்டுமின்றி, எல்லா படங்களும் இதனால் பாதிக்கப்படுகிறதே...

விஜய் சேதுபதி: இது ஒருத்தர் மீது சொல்லக்கூடிய குறை இல்லை. இங்கு பெரிய பிரச்சினை இருக்கிறது. வியாபாரம் பண்ற இடத்தில், வியாபாரக் கணக்கு வருவதில், இங்கு பேசுவதில்... எனக்கு ரொம்ப வேதனையாக இருந்த விஷயம், ‘ஆண் தேவதை’ படத்தின் இயக்குநர் தாமிரா பேசியதுதான். அதற்கு இதுவரை தீர்வு இல்லை. அதற்கு யாருமே தீர்வும் சொல்ல முடியாது. ஒருவர் வாங்கிய கடனை இன்னொருவர் தலையில் கட்டுவது எந்த வகையில் நியாயம்? என்னுடைய கடனில் 50 லட்ச ரூபாயை நீங்கள் கட்டுவீர்களா? மாட்டீங்க இல்லையா... ஆனால், ஒருவரிடம் வாங்கி அடைத்துள்ளனர். படம் ரிலீஸாவதற்கு விஜய் சேதுபதி காசு கொடுத்தான் என்று அவனை வேண்டுமானால் நீங்கள் பெருமையாகப் பேசலாமே தவிர, அதுமாதிரி ஏற்படுகிற பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன? என்னால் முடிகிறது, நான் கொடுக்கிறேன். ஆனால், அந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? அதை யார் பேசுவார்? அது ஒரு இடத்தில் இல்லை. அவர் தீர்த்து விடுவார், இவர் தீர்த்து விடுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை.

நிருபர்: உங்களுடைய பெருந்தன்மை நீங்க கொடுத்துட்டீங்க...

விஜய் சேதுபதி: இல்லை, இந்த மாதிரி நிறைய பேர் கொடுத்திருக்காங்க. பிரச்சினை எனக்கு மட்டும் நடக்கவில்லை என்று சொல்கிறேன்.

நிருபர்: இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கத்தானே சங்கம் அமைக்கிறோம். தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம்...

விஜய் சேதுபதி: நீங்கள் பாய்ண்ட் அவுட் செய்கிறீர்கள். இது பாய்ண்ட் அவுட் செய்யக்கூடிய விஷயம் இல்லை. நீங்கள் வெளியில் இருந்து பார்க்கிறீர்கள். உள்ளே வந்து பார்த்தால்தான் தெரியும். நீங்க ரிப்போர்ட்டர் தானே... உள்ள வந்து அனலைஸ் பண்ணி ஒரு ரிப்போர்ட் எழுதுங்க. எங்க இருந்து எங்கெல்லாம் போகுதுனு தெரியும்.

நிருபர்: அப்போ பொதுக்குழுவால் எதுவும் செய்ய முடியவில்லையா?

விஜய் சேதுபதி: நீங்க ஒரு பதிலை எதிர்பார்க்குறீங்கள்ல... அதற்கான பதிலை நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க வேற கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கீங்க. அது ஏன்?

நிருபர்: பிரச்சினையைக் கண்டறிவதற்கும், அதைத் தீர்ப்பதற்கும்தானே தயாரிப்பாளர்கள் சங்கம்?

விஜய் சேதுபதி: நீங்க ரொம்ப ஈஸியா சொல்றீங்க இல்லையா? அப்படி ஈஸியா இருந்தா இந்நேரம் செய்திருப்பார்களே... அது ஈஸியா இல்ல.

நிருபர்: அப்போ அவர்களால் முடியவில்லை என்கிறீர்கள்?

விஜய் சேதுபதி: இல்லை, பெரிய பிரச்சினை என்கிறேன். நீங்கள் வேறு எதிர்பார்க்கிறீர்கள். கான்ட்ரவர்ஸியா எதிர்பார்க்குறீங்க ப்ரதர். அதுல இல்ல ப்ரதர்.

நிருபர்: நான் என்னனு புரிஞ்சுக்க விரும்புறேன் சார்...

விஜய் சேதுபதி: ஒரு நிமிஷம் இருங்க. நீங்க ஜெயிக்க விரும்புறீங்களா? பேசுறதையும் கேட்க மாட்றீங்க. ஒரு கான்ட்ரவர்ஸிய உருவாக்குவதற்கான கேள்வியைக் கேட்குறீங்க. அதன் அர்த்தம் என்ன? நீங்க கேட்குற கேள்விக்கு நான் பதில் சொல்றேன். ஆனால், நீங்கள் கான்ட்ரவர்ஸிய உருவாக்கிக்கொண்டே இருக்கீங்க. அதன் அர்த்தம் என்ன? எனக்குத் தெரியாது, பிரச்சினை இங்கு இல்லை என்று சொல்கிறேன். அதைத் தாண்டி உங்களுக்கு என்ன வேணும்?

நிருபர்: சங்கம் இருக்கிறது, பொதுக்குழு இருக்கிறது. அவர்களால் தீர்வுகாண முடியாதா?

விஜய் சேதுபதி: அதற்காகத்தான் உள்ளே சென்று அனலைஸ் செய்து பாருங்கள், வேறொரு பதில் கிடைக்கும் என்றேன்.

நிருபர்: நீங்கள் முக்கியமான இடத்தில் இருக்கிறீர்கள். பிரபல நடிகர் நீங்களே இப்படி சொல்லும்போது, சாமானியனாக...

விஜய் சேதுபதி: அப்போ நீங்க மேம்போக்கா பார்த்துட்டு பேசுறீங்க, அதனாலதான் உங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. திரும்பவும் சொல்கிறேன், பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினையை ஒருவரால் தீர்க்க முடியாது என்றும் சொல்கிறேன். அதைத்தாண்டி உங்களுக்கு வேறென்ன வேணும்? நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். உங்களுக்குப் பதில் கிடைத்தும், நீங்கள் வேறொன்றை எதிர்பார்க்கிறீர்கள். இங்கு யார் மீதும் பழிபோடுவது அவசியமே இல்லை. இங்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை வெளியில் சொல்வது என் வேலை அல்ல.

(இடையில் வேறொரு நிருபர் குறுக்கிடுகிறார்)

விஜய் சேதுபதி: இருங்க, முதல்ல இவர் முடிக்கட்டும். நீங்க முடிங்க பார்க்கலாம்.

நிருபர்: ‘சீதக்காதி’க்கு இதுமாதிரி பிரச்சினை வந்தால் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

விஜய் சேதுபதி: ‘சீதக்காதி’க்கு பிரச்சினை வரவில்லை என்கிறேன். வேறென்ன?

நிருபர்: பிரச்சினை வந்துச்சுனா எதிர்கொள்ளத் தயாரா இருக்கீங்களா?

விஜய் சேதுபதி: என்னங்க இது... வண்டி வாங்கும்போது விபத்து நடந்தா என்ன பண்ணுவீங்க மாதிரி கேட்குறீங்க.

நிருபர்: ‘96’ படம் வரும்போது பிரச்சினை வருமா, வராதா...

விஜய் சேதுபதி: நீங்க திருந்த மாட்டீங்கனு நினைக்கிறேன். ஃப்ரீயா விட்டுடுங்க.

நிருபர்: தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் பாரபட்சம் பார்க்குறாங்கனு சொல்றாங்களே...

விஜய் சேதுபதி: சத்தியமா இதை நான் எதிர்கொள்ளவில்லை ப்ரதர். நீங்கள் எதிர்கொள்ளாத விஷயத்தை, நீங்கள் சொல்லவே முடியாது ப்ரதர். நான் உங்களுக்கு அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம், உங்களுக்கு நியாயம் தெரிகிற விஷயம் இருக்கு. நீங்கள் கேட்பது உங்களுடைய கண்ணோட்டம். என்னோட கண்ணோட்டத்தில் வேறு இருக்கிறது.

(நிருபர் குறுக்கிடுகிறார்)

விஜய் சேதுபதி: நீங்க பேசும்போது கேட்க மாட்றீங்க. கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தால் எப்படி பதில் சொல்வது? உங்களுக்குத்தான் பதில் சொல்கிறேன் நான்.

இவ்வாறாக அவர்கள் உரையாடல் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x