

‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஓவியா.
கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், ஆரவ் ஓவியா இருவரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இருவரும் காதலிப்பது போல அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. பின்னர், காதலிக்கவில்லை என்றனர். இருந்தாலும், ஆரவ் - ஓவியா ஜோடிக்கு ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா 3’, விஷ்ணு விஷாலுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘90 எம்எல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஓவியா.
‘ராஜபீமா’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆரவ். ஆஷிமா நர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார் ஓவியா. இதன்மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ்’ ஜோடி இணைந்திருக்கிறது.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஓவியா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள ஆரவ், “சிறப்புத் தோற்றம் மட்டுமல்ல, மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஓவியா ஆர்மிகளே... தயாராக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.