

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்தனர்.
அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்தப் படத்தில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்துடன், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கிவரும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் விஜய் ஆண்டனியுடனும், ‘சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது ‘சாஹோ’.
இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பாக்ஸர்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெறுகிறார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார். அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.