Published : 04 Dec 2018 06:08 PM
Last Updated : 04 Dec 2018 06:08 PM

பேட்ட அப்டேட்: விஜய் சேதுபதியின் லுக் வெளியீடு

'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திர லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடு என்பதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இன்று (டிசம்பர் 4) விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை போஸ்டர் வழியாக வெளியிட்டுள்ளது படக்குழு. ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் அவர் இருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்துள்ளனர். விஜய் சேதுபதி கதாபாத்திரப் பின்னணியில் ரஜினி நடித்து வருவது போன்றும் இடம்பெற்றுள்ளது.

மேலும், 'மரணமாஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடலை நேற்று ( டிசம்பர் 3) மாலை 6 மணியளவில் வெளியிட்டது படக்குழு. அனிருத் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x