

'அடங்க மறு' படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்து வருவதாக ஜெயம் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கன்னா, அழகம் பெருமாள், சம்பத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அடங்க மறு'. சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும், வசூலை அதிகரிக்க ஜெயம் ரவி பல்வேறு திரையங்களுக்கு சென்று வருகிறார். அப்போது பலரும் அப்படத்துக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்ததால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்க மறு' ஆகிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதலில் என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்தப் படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள் என்ற அளவில் இந்தப் படங்களின் திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த திரைப்படங்களில் முதலிலேயே கதாநாயகனாக என்னை கற்பனை செய்து பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நிச்சயமாக, நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், இந்தப் படங்கள் உருவாகியிருக்காது. வெறுமனே வெற்றி கொடுக்கும் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாகத் தேர்வு செய்வதில் உள்ள கூடுதல் பொறுப்பை நான் உணர்கிறேன். இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தன. அதைத் தாண்டி நல்ல படமாக கொண்டு வர தொழில்நுட்பக் கலைஞர்கள் கடுமையாக உழைத்தனர்.
மேலும் இந்தப் படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம், அவர்கள் தான் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க உந்தினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என் திரைப்படங்களை கொண்டாடினார்கள். அது தான் என்னை பல்வேறு வித்தியாசமான கதைகள் மற்றும் வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கிறது''.
இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.