நடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் சாந்தினி: திருப்பதியில் திருமணம்

நடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் சாந்தினி: திருப்பதியில் திருமணம்

Published on

நடிகை சாந்தினி நடன இயக்குநர் நந்தாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான 'சித்து +2' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதைத் தொடர்ந்து 'வில் அம்பு', 'என்னோடு விளையாடு', 'நையப்புடை',  'கவண்', 'ராஜா ரங்குஸ்கி', 'வஞ்சகர் உலகம்', 'பில்லா பாண்டி', 'வண்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 'வணங்காமுடி', 'டாலர் தேசம்', 'அச்சமில்லை அச்சமில்லை' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன.

'வில் அம்பு', 'இரும்புத்திரை', 'பியார் பிரேமா காதல்' உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் நந்தா. படப்பிடிப்பு தளத்தில் சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 9 வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் ஏற்கெனவே முடிந்த நிலையில் இன்று இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதில் இருவரது வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

டிசம்பர் 16-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைத் தொடர முடிவு செய்துள்ளார் சாந்தினி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in