Published : 04 Dec 2018 05:15 PM
Last Updated : 04 Dec 2018 05:15 PM

கொடிநாள் நிதிக்காக ட்விட்டரில் சூர்யா பிரச்சாரம்

இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி ‘கொடிநாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின்போது வசூலாகும் நிதியைக் கொண்டு போரில் உயிர்நீத்த வீரர்கள் மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும்.

இந்த வருட கொடிநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நிதியுதவி வழங்குமாறு ட்விட்டரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.

“நாம பாதுகாப்பா தூங்கணும்னா, ராணுவம் விழிப்போட இருக்கணும். நாம குடும்பத்தோட சந்தோஷமா வாழணும்னா, அவங்க குடும்பத்தைப் பிரிஞ்சு வெயில்லயும் மழையிலயும் குளிர்லயும் கஷ்டப்படணும். நாட்டு மக்களோட நிம்மதி, பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே ராணுவ வீரர்களோட தியாகத்துல இருக்கு.

அந்த தியாகத்துக்கு நம்ம நன்றியை, வெறும் வார்த்தையா வெளிப்படுத்துனா பத்தாது. ‘உங்களுக்குப் பிறகு உங்க குடும்பம் என்னாகும்னு நீங்க யோசிக்க வேண்டாம். நாங்க இருக்கோம், நாங்க பார்த்துக்கிறோம்’ங்கிற நம்பிக்கையை ராணுவ வீரர்களுக்குத் தரவேண்டியது நம்ம கடமை.

ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் டிசம்பர் 7 Armed Forces Flag Day, நம்ம நன்றியுணர்வை ராணுவ வீரர்களுக்கு வெளிப்படுத்துகிற நாள். போரால் பாதிக்கப்பட்ட வீரர்கள், போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ ‘கொடிநாள்’ நிதி திரட்டுறாங்க. நம்மால் முடிஞ்ச தொகையை ‘கொடிநாள்’ நிதிக்குப் பங்களிப்பாகத் தருவோம்.

போரால் பாதிக்கப்பட்ட, போரில் உயிர்நீத்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் வீரவணக்கம், ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ள சூர்யா, தொகையைச் செலுத்துவதற்கான ராணுவத்தின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x