விஷால் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு

விஷால் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு
Updated on
1 min read

கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ள ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நேற்று (புதன்கிழமை) தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) அந்தப் பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால், மன்சூரலிகான் உள்ளிட்டவர்கள் பாண்டிபஜார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது, நடிகர் ரமணா மடியில் விஷால் படுத்து உறங்கும் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, ‘தவறு செய்யாத எங்களைக் கைது செய்ததை நம்ப முடியவில்லை’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.

“நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உரிமையில்லாத நபர்கள் வந்து பூட்டியபோது வாய் திறக்காமல் இருந்த காவல்துறை, இன்று என்னையும், என் நண்பர்களையும் கைது செய்திருக்கிறது. இதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருப்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

இதற்கு எதிராக நாங்கள் மீண்டும் போராடுவோம். இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அனைத்து வேலைகளையும் மேற்கொள்வோம். சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டுவோம்” என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விஷால் மீது இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விஷால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in