

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்று, தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டு காட்டினார்கள். அவர்கள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்க சந்தோஷமடைந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தணிக்கைப் பணிகள் முடிவடைந்துள்ளதால், முழுமையாக விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் ட்ரெய்லரை புத்தாண்டுக்கு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் முக்கியமான தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.