Published : 09 Dec 2018 09:29 PM
Last Updated : 09 Dec 2018 09:29 PM

ரஜினி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் இனி பொறக்கப் போறதில்லை: கலாநிதி மாறன் பேச்சு

சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி சார் மட்டும்தான். இனி யாரும் வரப்போறதும் இல்லை.  பொறக்கப் போறதும் இல்லை என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்  பேசினார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் சன் டிவி கலாநிதி மாறன் பேசியதாவது:

''அர்ப்பணிப்பு உணர்வுடனும் அழகாகவும் தெளிவாகவும் படத்துக்கும் கதைக்கும் கதை நாயகர்களுக்கும் தகுந்தது போல் இந்தப் படத்துக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார் விவேக்.

ஆளைப் பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்வாங்க. அனிருத் ஒரு பென்சில் மாதிரி இருந்துக்கிட்டு, மியூஸிக்ல என்னென்னவோ பண்ணியிருக்காரு. ஏற்கெனவே ஒரு ஆஸ்கர் வந்தாச்சு இங்கே. நீங்க ஒரு ஆஸ்கரை வாங்கிட்டு வந்துருங்க.

கார்த்திக் சுப்பராஜ், பிரான்ஸ்ல ஐடி கம்பெனில வேலைக்குப் போயிட்டு, மூணே நாள்ல திரும்ப வந்துட்டாரு. சினிமால அப்படியொரு ஆர்வம். இந்தப் படம் ரொம்ப டிப்ரண்ட்டாவும் இருக்கும். மாஸாவும் இருக்கும். அப்படி எடுத்திருக்காரு கார்த்திக் சுப்பராஜ்.

ரஜினி சாரைப் பத்தி புதுசா சொல்ல எதுவுமே இல்லை. வாரணாசியில ஷூட்டிங். அங்கே நல்ல, பெரிய ஹோட்டலெல்லாம் இருந்தாலும் ஒரு சாதாரண ஹோட்டல்லதான் தங்கினார். அவ்வளவு சிம்பிள் அவர்.

அதுமட்டுமில்லாம, புரொடக்‌ஷன் சைடுல இருக்கறவங்ககிட்ட, அடிக்கடி, பட்ஜெட்டை தாண்டிப் போயிருச்சா, பட்ஜெட்டை தாண்டலைதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார் ரஜினி சார்.

எட்டு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி 'எந்திரன்' பட ஆடியோ விழால சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். சூப்பர்ஸ்டார்னா அது ரஜினி சார் மட்டும்தான். இனி யாரும் வரப்போறதும் இல்ல, பொறக்கப் போறதும் இல்ல''.

இவ்வாறு கலாநிதி மாறன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x