

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. 'சர்கார்' இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரியிலேயே, 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கு முன்பாக டிசம்பர் 3-ம் தேதி ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இன்று (டிசம்பர் 1) பாடல் வெளியீட்டிற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. 'மரண மாஸ்' என்ற பெயர் கொண்ட இப்பாடல் குத்துப்பாட்டு வகையில் இருக்கும் என்று போஸ்டரில் அறிவித்துள்ளது படக்குழு.
நீண்ட நாட்கள் கழித்து ரஜினி படத்தில் குத்துப்பாட்டு இடம்பெறவுள்ளதால், ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். மேலும், 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான விளம்பரப்படுத்தும் பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் குழு.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிக்குமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
2019-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.