

அரசியலில் களம் இறங்கபோவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சார்பாக விரைவில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி நேரடி அரசியலில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக முதல்கட்டமாக தனது ரசிகர் மன்றத்தை தயார் செய்து வருகிறார். ரஜின ரசிகர் மன்றம் தற்போது ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு அதில் அதிகஅளவில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி தனக்கு ஆதரவாக தொலைக்காட்சி சேனல் ஒன்று இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கூறுகையில் ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ மற்றும் ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது’’ எனக் கூறினார்.
சுதாகர் பெயரில் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பத்தில் ரஜினியின் பெயர், போட்டோ போன்றவற்றை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதுபோலவே ரஜினிக்கு மிக நெருக்கமான வட்டாரங்களும், இந்த தகவல்களை உறுதி செய்துள்ளன.