

டிசம்பர் 28-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய 'சர்வம் தாளமயம்' திரைப்படம், பிப்ரவரியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் MINDSCREEN நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்தனர். ஆனால், டிசம்பர் 28-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி வெளியீடாக திரைக்கு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியது.
தற்போது 'சர்வம் தாளமயம்' படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம். பிப்ரவரி 2019 முதல்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிப்ரவரி வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தமிழக விநியோக உரிமையை சக்திவேலன் கைப்பற்றியுள்ளார்.