

'சூர்யா 37' படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என ரசிகர்களிடம் வாக்கெடுப்பு தொடங்கியுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். லண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இதுவரை இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதுவரை 'சூர்யா37' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று வாக்கெடுப்பு தொடங்கியுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த், “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். 'சூர்யா37' படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்” என்று வாக்கெடுப்பு தொடங்கி அதற்கு "மீட்பான், காப்பான், உயிர்கா" என மூன்று பதில்கள் கொடுத்துள்ளார். இதற்கு சூர்யா ரசிகர்கள் பலரும் 'உயிர்கா' என்ற பதிலையே 41% பேர் தேர்வு செய்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.