

இதோ... 2018 விடைபெறப் போகிறது. நாளை 1-ம் தேதி. 2019 உதயமாகிறது. 2018-ன் நள்ளிரவில் தமிழகமெங்கும் ஒலிக்கும் ஒரே பாடல்... ‘விஷ்யூ ஹேப்பி நியூர்’ என்கிற 'சகலகலா வல்லவன்' படப்பாடல்தான்!
1982-ம் ஆண்டுக்கு முன்பு வரை எப்படி? புத்தாண்டு அன்று என்ன பாடல் ஒலிபரப்பினார்கள், ஒளிபரப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குப் பிறகு புத்தாண்டு தொடங்கும் வேளையில், 'சகலகலா வல்லவன்' பாட்டுதான், எல்லா இடங்களிலும் ஒலிக்கும் என்பது எழுதப்படாத ஒன்றாகிவிட்டது.
1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று சுதந்திர தினத்தையொட்டி ரிலீஸ் செய்யப்பட்டது 'சகலகலா வல்லவன்'. ஏவிஎம் தயாரிப்பில், கமல் நடித்து மிகப்பிரம்மாண்டமான வெற்றியையும் வசூலையும் குவித்தது இந்தப் படம்.
முதல் பாதியில் குடுமியும் முறுக்கு மீசையும் வைத்த கிராமத்தானாகவும் அடுத்த பாதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகிற ஸ்டைலீஷ் வாலிபனாகவும் வந்து பட்டையைக் கிளப்புகிற எம்ஜிஆரின் பெரிய இடத்துப் பெண் பார்முலாக்களைக் கொண்ட படம்தான், 'சகலகலா வல்லவன்'.
ஆனாலும் தன் நடிப்பு, சண்டைக்காட்சி, நடனம், காமெடி ஆகியவற்றால் புதுக்கோட்டிங் கொடுத்து, மிகப்பெரிய ஹிட்டடித்திருப்பார் கமல்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம். இந்த சகலகலா வல்லவன் படம்தான் கமலை பட்டிதொட்டி என சி சென்டர் ஆடியன்ஸுக்குப் பிடித்த நடிகராகவும் கொண்டுசேர்த்தது. அதுவரை ஏ மற்றும் பி சென்டர் ஆடியன்ஸுக்கான நடிகராகவே பார்க்கப்பட்டார் கமல்.
கமல், அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே.ராமசாமி, புஷ்பலதா, சில்க் ஸ்மிதா, ரவீந்தர், துளசி, தேங்காய் சீனிவாசன் என பலரும் நடித்திருக்கின்ற இந்தப் படத்தில் இருந்துதான், இளையராஜா டைட்டில் பாடல் பாடினால் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று திரையுலகம் சொல்லத் தொடங்கியது.
இந்தப் படத்தின் டைட்டிலில் அம்மன் கோவில் கிழக்காலே என்ற பாடலை இளையராஜா பாடி இசையமைத்திருப்பார்.
கட்டவண்டி, நிலாக்காயுது, நேத்து ராத்திரி என்று எல்லாப் பாடல்களுமே இன்றைக்கும் மறக்காது ரகம்தான். எல்லாவற்றையும் விட, ‘இளமை இதோ இதோ...’ என்கிற ஹேப்பி நியூ இயர் பாடல்தான் இதோ... 37 வருடங்கள் கழித்தும் கூட ராஜபாட்டையாக இருக்கிறது, இந்த ராஜாவின் பாடல்.
தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில், டீக்கடைகளிலும் டெய்லர் கடைகளிலும் இந்தப் பாடலைப் போட்டுவிட்டு ஆடுவார்கள். வாழ்த்து சொல்லிக்கொள்வார்கள்.
இன்னொரு கட்டத்தில், தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ஏதோவொரு படம் இரவுக்காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும். சரியாக 12 மணியாகும் போது, சர்ப்ரைஸாக, சகலகலா வல்லவன் படத்தின் பாடலையோ பாடல் காட்சியையோ ஒலிபரப்புவார்கள். ஒளிபரப்புவார்கள். விசில் பறக்கும். காதுகிழியும். ஆட்டமும்பாட்டமுமாக புத்தாண்டை வரவேற்பார்கள் ரசிகர்கள்.
அந்த பைக் ஆக்ஸிலேட்டர் சத்தமும் எஸ்.பி.பியின் எவரிபடி... விஷ்யூ ஹேப்பி நியூ இயர் என்கிற குரலும் இளையராஜாவின் இசையும் அப்படியே கமல்ஹாசனை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடும்.
பிறகு சேனல்கள் வந்ததும் புத்தாண்டு தொடங்கும் 12 மணியின் போது இந்தப் பாடலை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். இன்று வரை இந்தப் பாடல்தான் ‘நான்தான் சகலகலாவல்லவன்’ என்றும் ‘எப்பவும் நான் ராஜா’ என்றும் ஹேப்பி நியூ இயர் சொல்லி வாழ்த்திக்கொண்டிருக்கிறது.
ஹேப்பி நியூ இயர்!