

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.
இயக்குநர் மகேந்திரன், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநராகவே கெஸ்ட் ரோலில் அவர் இந்தப் படத்தில் வருகிறார்.
ரம்யா நம்பீசனும் இந்தப் படத்தில் நடிகையாக கெஸ்ட் ரோலில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா - மகன் என முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
வருகிற 20-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) காலை ‘சீதக்காதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி, “என் 25-வது படமாக எதைப் பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில்தான் இந்தப் படம் எனக்கு அமைந்தது.
இந்தக் கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்தக் கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21-ம் தேதி ரிலீஸாகும் எல்லாப் படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.