

யூ டியூப் தளத்தில் 'பேட்ட' ட்ரெய்லர் செய்த சாதனையை முறியடித்துள்ளது 'விஸ்வாசம்'
ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படமும், அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இரண்டு படத்தின் ட்ரெய்லர்களையும் வைத்துக் கொண்டு ரசிகர்களிடையே பெரும் போட்டி, சண்டை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு படத்தின் ட்ரெய்லரும் 1 கோடி பார்வைகள் கடந்தால் யூ டியூப் தளத்தில் பெரும் சாதனையாகக் கருதப்படும். அந்த வரிசையில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள் தான் 1 கோடி பார்வைகளைக் கடந்தது.
ஆனால், நேற்று (டிசம்பர் 30) வெளியிடப்பட்ட 'விஸ்வாசம்' படத்தின் ட்ரெய்லர் வெளியான 9 மணிநேரத்துக்குள்ளாகவே 1 கோடி பார்வைகளைக் கடந்து பெரும் சாதனை புரிந்தது. இதனை சத்யஜோதி நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
தென்னிந்திய மொழி படங்களின் ட்ரெய்லர்களில் குறைவான நேரத்தில், 1 கோடி பார்வைகளைக் கடந்த முதல் படம் 'விஸ்வாசம்' என்ற சாதனையையும் அப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும், 'விஸ்வாசம்' படத்தின் ட்ரெய்லருக்கு 1 மில்லியன் லைக்ஸ் குவிந்துள்ளதும் சாதனையாகக் கருதப்படுகிறது.